tamilnadu farmers fasting in delhi for second day
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள், டெல்லியில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகிறது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரத்தில், எந்தவித அதிகாரமுமில்லாத மேற்பார்வை ஆணையத்தை அமைக்காமல், அதிகாரமிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றன.
இதற்கிடையே இன்று, கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அதை காரணம் காட்டி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்த வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் தான் அமைக்க வேண்டும். அதற்கு பதிலாக வேறு எந்த அமைப்பும் அமைக்கப்பட கூடாது என வலியுறுத்தி தமிழக விவசாயிகள், டெல்லியில் நாடாளுமன்றம் செல்லும் வழியில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.
