ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொதுப்போக்குவரத்தான பேருந்துகளை இயக்கினால் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கும் என்று, முதல்வருடனான ஆலோசனையின் போது மருத்துவ குழுவினர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த  மார்ச்-24ஆம் தேதி முதல், வருகிற 31-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மே 31-ஆம்  தேதிக்குப் பிறகு மேலும் இரண்டு வாரங்கள், அதாவது ஜூன்  14-ஆம் தேதி வரை நீட்டிக்கலாமா,  ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ளலாமா,  அல்லது பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா என்பன உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை  நடைபெற்றது.

 

அக்கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்திகள்,  மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் வழிமுறைகள்,  சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்கனவே உள்ள நோய்களை கண்டறிந்து உயிரிழப்பை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய சிகிச்சை முறைகள், முக்கியமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் வராமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கூட்டத்தில் பேசிய மருத்துவர்கள் பலரும் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.  இதையடுத்து தமிழகத்தில் ஐந்தாம் கட்டமாக,  ஒன்றாம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்.  குறிப்பாக இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் நோய் அதிகம் பாதித்து வரும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது.