தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கட்டு பல்வேறு தளர்வுகள் அறிவித்தாலும் தற்போதைக்கு பொது போக்குவரத்து  விதிக்கப்பட்ட தடை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 25ம் தேதி முதல் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில், சில நாட்கள் மட்டும் மண்டலத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததும் மருத்துவ நிபுணர்கள் கூறிய ஆலோசனைப்படி ஜூலை 1ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், ஊரடங்கும் 31ம்  நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை மறுநாள் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தத் தளர்வுகளுடனான ஊரடங்கு தற்போது ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்படாலும்  பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து துவக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையிலும், அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுப்போக்குவரத்தை அனுமதித்தால், நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பேருந்து, ரயில் போக்குவரத்து மற்றும் மால்கள், தியேட்டர்கள் இயங்குவதற்கான தடை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.