திருநாவுக்கரசர் மீது தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் டெல்லி தலைமைக்கு புகார் தெரிவித்து வந்தனர். தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக தனது ஆதரவாளர்களை மட்டுமே நியமித்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் தாய் மூகாம்பிகை கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்த திருநாவுக்கரசரை டெல்லி மேலிடம் அவரசமாக அழைத்தது. இதையடுத்து அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்,

இதையடுத்து அவர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என செய்தி பரவியது. இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கடலூர் தொகுதி முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜெயகுமார், விஷ்ணு பிரசாத்,  மயூரா ஜெயகுமார், வசந்த குமார் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்,

கே.எஸ் அழகிரி இரண்டு முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் கே.எஸ்,அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் அனைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,