மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதியது வெறும் காதல் கடிதம் மட்டுமே என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கு வழங்கப்படும்  இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை கண்டித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தலைமையில் ரயில் நிலைய அஞ்சலக  அலுவலகம் எதிரில் சமூக இடைவெளி விட்டு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  ஆர்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கொரோனா ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் ஆர்பாட்டத்தில் 5 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணி தாகூர் எம்.பி , மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவது விவசாயிகளை மட்டும் பாதிக்கும் திட்டம் அல்ல , 

சாமானியர்களையும் பாதிக்கும் திட்டம் என கூறினார். மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மாவட்டத்தையாவது கட்டாயமாக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு ,  மாநில அரசுகளை வற்புறுத்தி வருகிறது என குற்றம் சாட்டினார். மேலும் மின்சாரத்தை தனியார் மயமாக மாற்றினால்  ஒவ்வொரு வீட்டின் மின்சார கட்டணமும் உயரும் அபாயம் உள்ளது. மின்சாரத் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு துடிப்பதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார். எதிர்க்கட்சிகள் 1000 பேருக்கு மேல் கூட்டத்தை கூட்டி ஆர்பாட்டம் செய்து எதிர்ப்பை தெரிவிக்க இருப்பதாகக் கூறுவது கொரோனா வைரஸ் மேலும் பரவ வழிவகுக்கும்  என்ற மா.பா.பாண்டிய ராஜனின் கருத்துக்கு பதில் அளித்த மாணிக் தாகூர்,  எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது ஜனநாயக கடமை, 

இருப்பினும் சட்டத்திற்கு உட்பட்டு 5 நபர்களுடன் எதிர்ப்பைக் காட்டி வருகிறோம். எதிர்ப்பை காட்ட வில்லை என்றால் இது சர்வாதிகார நாடாக மாறிவிடும் , அதை மா.பா பாண்டியராஜன் வரவேற்கிறாரா என கேள்வி எழுப்பிய மாணிக் தாகூர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதியது வெறும் காதல் கடிதம் மட்டுமே அந்த கடிதத்தை மத்திய அரசு ஒரு போதும் ஏற்க போவதில்லை எனவும் ,  தொடர்ந்து தமிழக அரசு எழுதும் கடிதத்துக்கு மத்திய அரசு  மதிப்பு கொடுக்காமல் முடிவெடுத்து வருகிறது , நீட் தேர்வை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது போல் இந்த மின்சார திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என விமர்சனம் செய்தார். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  இந்த மின்சாரத் திட்டம் விவாத்திற்க்கு வரும் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை எதிர்க்க தயங்கக்கூடாது எனக் கூறினார்.