Asianet News TamilAsianet News Tamil

ராகுல் தகுதி நீக்கம் விவகாரம்... ஒரு மாத தொடர் போராட்டத்தை அறிவித்தது தமிழக காங்.!!

ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

tamilnadu congress announced one month long protest in rahul gandhi demotion issue
Author
First Published Mar 29, 2023, 4:46 PM IST

ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் ஒரு மாதம் தொடர் போராட்டங்களை நடத்த உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி பதவி பறிப்பு, அதானி விவகாரம் குறித்து நாடு முழுவதும் ஒரு மாதகால தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ராகுல் காந்திக்கு ஆதராகவும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் கடந்த 26 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காந்தி சிலை மும்பு தமிழகம் முழுவதும் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடத்தப்பட்டது.

சட்டசபையிலும், மாநகராட்சி மன்றத்திலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள். கடந்த 24 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஜெய் பாரத் சத்தியாகிரகம் என்ற பெயரில் ஒருமாத கால தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி ஏப்ரல் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்படும். சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்ற வகையில் பரப்புரை மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பும்; கட்சிகள் முன்பு இருக்கும் சவால்களும்!!

மேலும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு மோடி - அதானி கூட்டுக் கொள்ளை குறித்தும், ஜனநாயக விரோதமாக தலைவர் ராகுல்காந்தி பதவி பறிப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். மேலும், பாஜக ஆட்சியை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாஜக-வின் ஜனநாயகப் படுகொலை என்ற தலைப்பில் பிரச்சார கையேடு வரும் மார்ச் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும். ஜெய்பாரத் சத்தியாகிரக போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை கோரும் வகையில் தலைவர் ராகுல்காந்தி விடுக்கும் செய்தியை சமூக ஊடகம் மற்றும் அச்சு ஊடகங்களின் வழியே பரப்புவதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். 

ஏப்ரல் 1 ஆம் தேதி வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டிகளின் அளவில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி அளிப்பார்கள். ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் சென்னையில் பி.ஆர். அம்பேத்கர் அல்லது மகாத்மா காந்தி சிலைகள் முன்பு தமிழக காங்கிரசின் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் துறை, சிறுபான்மைத்துறைகளின் சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழக இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் சார்பில் பிரதமர் மோடிக்கு கேள்விகள் எழுப்பி அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும்.

இதையும் படிங்க: பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம்... நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா?

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பெருந்திரளான மகளிர் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பார்கள். ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி மாவட்ட தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும். தமிழக காங்கிரசின் சார்பில் மாநில அளவில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நடத்தப்படும். அதில் தேசியத் தலைவர்கள் பங்கேற்பார்கள். அதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும். ஏப்ரல் மாதம் 2 ஆவது வாரம் டெல்லியில் ஜெய் பாரத் மகா சத்தியாகிரகம் நடத்தப்படும். இதற்கான தேதி அறிவிக்கப்பட்டு அதில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்பார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள கண்டன போராட்டங்களில் தமிழகத்தில் உள்ள முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம் வெற்றி பெறுகிற வகையில் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டோடு தங்களது பங்களிப்பை மிகப் பெரிய அளவில் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய பங்களிப்பின் மூலமே பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்று ராகுல் காந்தியின் கரங்கள் வலிமைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios