பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம்... நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா?
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர்களாக பணியாற்றி வரும் அவர்களை நிபந்தனைகள் ஏதும் இன்றி நிரந்தர பேராசிரியர்களாக உடனடியாக நியமிக்க வேண்டும்.
தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தகுதியான சம்பளம் நிர்ணயம் செய்து முறையாக வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாஜக தலைமையகமான கமலாலயத்தில் 3வது மாடியில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 வரை தமிழக பாஜக மாநில கல்வியாளர் பிரிவின் மாநில செயற்குழு, பிரிவின் தலைவர் தங்க கணேஷ் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் விவரம்;-
* திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர்களாக பணியாற்றி வரும் அவர்களை நிபந்தனைகள் ஏதும் இன்றி நிரந்தர பேராசிரியர்களாக உடனடியாக நியமிக்க வேண்டும்.
* அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் நீண்ட காலமாகபகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை இதுவரை நிரந்தரமாக்கப்படாமல் காலம்தாழ்த்தி ஏமாற்றுகிறது தமிழக அரசு உடனடியாக அவர்களை நிரந்தரம் செய்ய திமுக அரசு முன் வர வேண்டும்.
* உன்னதமான தேசிய கல்விக் கொள்கை 2020ல் உள்ள சிறப்பான திட்டங்களை தேர்வு செய்து அதற்கு வேறு பெயர்கள் சூட்டி தமிழக அரசு கல்விக் கொள்கையாக அறிவிக்கும் பழக்கத்தை திமுக அரசு கைவிட்டு விட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ முழுமையாக தமிழகத்தில் அமல்படுத்திட திமுக அரசு உடனடியாக முன்வர வேண்டும் .
* நவோதயா பள்ளிக்கூடங்கள் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழகம் தவிர்த்து அங்குள்ள எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்க திமுக அரசு முன்வராதது அந்த மாணவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். திமுக அரசு உடனடியாக நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கி எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கிட முன்வர வேண்டும்.
* தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தகுதியான சம்பளம் நிர்ணயம் செய்து முறையாக வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். முன்னறிவிப்பு இன்றி வேலையில் இருந்து விடுவிப்பதை தவிர்க்க சரியான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
* தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் உரிமம் புதுப்பிக்கும் முறை மூன்றாண்டுக்கு ஒரு முறையாக இருந்து வந்தது அதை ஓராண்டுக்கு ஒரு முறை என மாற்றியதை வன்மையாக கண்டிக்கின்றோம். ஏற்கனவே இருந்தபடி மூன்று ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றம் செய்திட திமுக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.