தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 5 அல்லது 6 கோஷ்டிகளாக பிரிந்து தமிழக காங்கிசார் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள திருநாவுக்கரசர், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளில் இருந்து காங்கிரசில் சேர்ந்தவர். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகே இளங்கோவனுக்கும் இவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்.

அந்த அளவுக்கு இரு கோஷ்டிகளும் அடிக்கடி மோதிக் கொள்ளும். திருநாவுகரசரை எப்படியாவது தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட வேண்டும் என இளங்கோவன், ப.சிதம்பரம் போன்ற அனைத்து கோஷ்டிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தென் மாநில காங்கிரஸ் தலைமைகளில் ராகுல் காந்தி பல மாற்றங்களை  செய்து வருகிறார். கேரளாவில் காங்கிரஸ் தலைவராக முள்ளம்பள்ளி ராமச்சந்திரனையும், செயல் தலைவர்களாக சுதாகரன், ஷா நவாஸ்,சுரேஷ் ஆகியரை நியமித்துள்ளார்.

இதே போல் தமிகத்திலும் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என கூறப்படுகிறது. இதற்காக ஈவிகே இளங்கோவன், கே.எஸ்.அழகிரி மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், இவர்களில் யாராவது ஒருவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கலாம் என பேச்சு எழுந்துள்ளது.