ராஜன் செல்லப்பாவின் பேட்டி அதிமுகவுக்குள் படு சலசலப்பை உண்டாக்கியுள்ள நிலையில், ‘அவரது பேட்டியை நான் பார்க்கவில்லை. ஊடகங்கள் எப்போதும் பரப்புக்காக எதையாவது செய்துவிடுகிறீர்கள்.உங்களை நம்பி பதிலளிக்கமுடியாது’ என்று கழுவுற மீனில் நழுவுற மீனாகியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி.

மதுரையில் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா,  அதிமுகவில் இரட்டைத் தலைமை நிலவி வருவதால் உட்கட்சிப் பூசல் அதிகரித்துவருவதாக ஒரே நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் ஆப்பு வைத்திருந்தார்.

ராஜன் செல்லப்பாவின் கருத்து குறித்து நிருபர்களின் கேள்விக்கு சேலத்தில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி,’’’’அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏக்களும் அம்மா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்பது தவறான தகவல். அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள். அம்மா சமாதியில் பணி நடந்து கொண்டு இருப்பதால் அது பலருக்கு தெரியவில்லை. அதிமுக தொண்டர்களால் ஆளுகின்ற கட்சி. கட்சியில் இரட்டைத் தலைமை எல்லாம் இல்லை. இப்போதைக்கு கட்சியில் இருக்கிற அத்தனை பேருமே தலைவர்கள் தான் என்று குண்டைப்போட்டார். அதே சமயத்தில் தான் இன்னும் ராஜன் செல்லப்பாவின் பேட்டியை பார்க்கவில்லை என்றும் பார்த்தபிறகு பதில் சொல்வதாகவும் நழுவினார்.

ராஜன் செல்லப்பாவின் பேச்சு அதிமுகவில் ஏற்கனவே நிலவி வந்த குழப்பத்தை இன்னும் அதிகரித்திருக்கும் நிலையில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுல் ஒருவரான கே.சி பழனிச்சாமி ராஜன் செல்லப்பாவை முற்றிலுமாக ஆதரித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும். அதற்கு உடனே பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்ற ரா.செ.வின் கருத்தை மிக ஸ்ட்ராங்காக வழிமொழிகிறார் கே.சி.பழனிச்சாமி.

ஏற்கனவே பல்வலியால் தவித்துக்கொண்டிருந்த எட்ப்பாடிக்கு இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற ஒற்றைத் தலைவலியும் உண்டாக்கப்பட்டுள்ள எந்த மாதிரியான ட்ரீட்மெண்டுக்கு அவர் தயாராகப்போகிறார் என்பதை மிக விரைவில் தெரிந்துகொள்ளமுடியும். ஏனென்றால் பல்வலியும், தலைவலியும் சிகிச்சை எடுக்காமல் தள்ளிப்போட முடியாதவை.