ஆர்.எஸ் பாரதி ஏதோ ஊழல்களை கண்டுபிடிக்க விஞ்ஞானி போலவும் ,  அவரை அரசு  திட்டமிட்டே கைது செய்தது போலவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.  பொய் பிரச்சாரங்கள் மூலம்  மக்களிடம் அனுதாபம் தேடும் திமுகவின் முயற்சியை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். பட்டியலின சமுதாயத்தை இழிவுபடுத்திய பேச்சுக்காக ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.  இதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார் . திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர். எஸ் பாரதி ,  மாநிலங்களவை உறுப்பினரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.  

அதாவது தலித் மக்கள் இன்றைக்கு  நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார் , தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ் பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவந்த நிலையில் ,  இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் .  அதிமுக அரசு திமுகவை பழிவாங்கும் நோக்கிலும் ஆர். எஸ் பாரதி  ஆளுங்கட்சியின் ஊழல்களை அம்பலபடுத்தி வருகிறார் என்பதால் அவர் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை இது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் .  இந்நிலையில்  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது,  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , மதுரையைச் சேர்ந்த ஆதித்தமிழர் பேரவைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தங்களது பட்டியல் இனத்தை இழிவு படுத்தி பேசியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதற்கும் அரசுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.?  ஒரு சமூதாயத்தை இழிவு படுத்தி பேசியதற்கு கட்சித் தலைவர் என்ற முறையில் அவரை கண்டித்திருக்க வேண்டும் அதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு ,  ஆனால்  ஆர். எஸ் பாரதி மிகப்பெரிய விஞ்ஞானி போலவும் அவர் அதிமுக மீது ஊழல் புகார் செய்ததால் அவரை அரசு திட்டமிட்டு கைது செய்தது போலவும் திமுக தோற்றத்தை ஏற்படுத்துகிறது . ஊடகங்களும் உண்மைத் தன்மை அறிந்து செய்தி வெளியிட வேண்டும்   அதில் என்ன உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும் இது அனைத்தும் திமுக  திட்டமிட்டு செய்யும் அரசியல் நாடகம் என முதலமைச்சர் விமர்சித்தார்.