2019-2020-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ. 44,176 கோடியாக இருக்கும் என்றார். அதேபோல் வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவி்த்தார்.

தமிழக பட்ஜெட்டின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் துவங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது. 8-ம் தேதி முதல்வர் எடப்பாடியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்தது. 

இந்த நிலையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை கூடியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் இன்று 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 6 முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றி வருகிறார். 3 முறை என்னை முதல்வராக்கியவர் ஜெயலலிதா. எனது குல தெய்வம் ஜெயலலிதா. அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது வாழ்த்துகள். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை வரும் 2019-20-ம் நிதியாண்டில் ரூ. 44176 கோடியாக இருக்கும். வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்.

 

2019-20-ல் தமிழக அரசின் செலவினங்கள் ரூ. 2,08,671-ஆக இருக்கும். புதிய நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ. 1,97,721 கோடியாக இருக்கும். தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையாக ரூ.10,950 கோடியாக இருக்கும் என ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.