பாஜகவிற்கு ஒதுக்கி உள்ள 5 தொகுதிகளில் ஒரு தொகுதி பாஜக இளைஞரணிக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில், எப்படியோ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டது என பெருமூச்சு விடும் விடும் பாஜகவில், இளைஞரணி ஒரு பிட்டு போட்டு உள்ளது.

அதாவது அதிமுக உடனான கூட்டணியில் பாஜக  விற்கு ஒதுக்கப்பட்டது 5 தொகுதி. அதன் படி, கோயம்புத்தூர் - ராதா கிருஷ்ணன், கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை- எச். ராஜா, தூத்துக்குடி - தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் இருக்கக்கூடிய ஒரு தொகுதி... ராமநாதபுரமா அல்லது நீலகிரியா அல்லது வட சென்னையா? என்ற குழப்பம் நிலவி வருகிறது.

எந்த தொகுதி என முடிவு எடுப்பதற்குள் தற்போது பாஜகவில் ஒரு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது மீதமுள்ள ஒரு சீட் பாஜக இளைஞரணிக்கு தான் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. மக்கள் மத்தியில் பாஜகவின் சாதனைகள் கொண்டு சேர்ப்பது முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கட்சிக்கு தொண்டாற்றி வரும் இளைஞரணிக்கு இவ்வளவு தான் முக்கியத்துவமா என உட்கட்சி பூசல் லேசாக உரச ஆரம்பித்து உள்ளது. 

பிரதமர் மோடி என்னமோ.. "இன்றைய இளைஞர்களை அரசியலுக்கு  வரவேற்கிறேன் என்கிறார்.. முதல்முறையாக ஓட்டு போடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்கிறேன் என்கிறார்".. ஆனால், சீட் கொடுப்பதில் மட்டும் சைலண்டா இருப்பாங்க... எப்போதுமே பணபலமும், அதிகார பலமும் கொண்டவர்களுக்கு சீட்  கொடுத்தால், நாங்கள் என்னதான் செய்வது? என கொதித்தெழ தொடங்கி உள்ளது தமிழக பாஜக இளைஞரணி. 

இது ஒரு பக்கம் இருக்க, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக  தேர்தல் பொறுப்பாளருமான முரளிதர் ராவ்  கலந்துகொள்ளும்  மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கூட தமிழக பாஜக இளைஞரணி தலைமையில் தான் நடக்கிறது. இது போன்று ஓடோடி  ஓடோடி உழைக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் என்ன ? என முணுமுணுக்க தொடங்கி உள்ளது  இளைஞரணி.

இதனை தொடர்ந்து, இளைஞரணிக்கு மீதமுள்ள ஒரு சீட் வழங்க ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாம் கட்சி. அவ்வாறு ஒதுக்கப்பட்டால், ராமநாதபுரம் தொகுதியில் இளைஞரணி செயலாளராக உள்ள  பாண்டியன் என்பவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. 


 
இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்தபின்பு தான், எந்தெந்த தொகுதியில் யாரெல்லாம் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கமாக இருந்த தமிழக பாஜக இளைஞரணி தற்போது வருத்தப்பட தொடங்கி உள்ளதால் சீட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.