காவிரி மேலாண்மை வாரியம் வரும் 30 ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

காவிரி மேலான்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அதன் காலக்கெடு வரும் 30 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

கோடை வெளிலுக்கு முன்பாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு டிடிவி
தினகரன் உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் 30 ஆம் தேதிக்குள்
அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் காங்கிரஸ் பின்னோக்கி செல்வதாக கூறினார். உலகத்தில் உள்ள எந்த இயந்திரத்தைக் கொண்டு வந்து வைத்தாலும் தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட்தான் வாங்கும். தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவை இயந்திரத்தின்மீது போட்டு காங்கிரஸ் கட்சி கொச்சைப்படுத்த வேண்டாம் என்றார்.

திராவிட நாடு குறித்த கருத்தில் மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் இருப்பதாக கூறினார். அதிமுகவை பாஜக இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. பாஜக மீது திட்டமிட்டே பழி சுமத்துகிறார்கள். தவறான கருத்தை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இதனை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள்
என்றார்.

வரும் 30 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.