காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது. விவசாயிகள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

திமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, மெரினா கடற்கரை சாலைகளில் மறியலில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் கலந்துகொண்டனர். இதில், ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், ஸ்டாலினை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இதுவரை இல்லாத அளவிற்கு முழு அடைப்பு போராட்டம் 100% வெற்றி அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இன்று மாலை நடக்கவிருந்த அனைத்து கட்சி கூட்டம், நாளை நடைபெறும். அந்த கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். காவிரி உரிமை மீட்பு பயணம் வரும் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் தொடங்கி கடலூரில் முடிவடையும். அந்த பயணத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகளின் அதிரடியான போராட்ட முன்னெடுப்புகளை கண்டு ஆட்சியாளர்கள் சற்றே கலங்கிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.