தமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தை கொண்டு வருவார். அவர்தான் மு.க.ஸ்டாலின் என்று திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு கூறினார். அப்போது, குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் 'வரும் ஆனா வராது' என்று கூறியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. 

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எப்படியாவது அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால், அந்த தடைகளை எல்லாம் தவிடுபோடியாக்கி முதல்வர் எடப்பாடி ஆட்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துறை ரீதியான விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  

அதன்பிறகு, தமிழகத்தில் சட்டக் கல்லூரிகள் அமைப்பது, தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். பிறகு சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு, தமிழகத்தில் நிச்சயம் ஒருவர் மாற்றத்தைக் கொண்டு வருவார், அவர் தான் ஸ்டாலின் என்று பேசினார். சேகர்பாபு பேசிக் கொண்டிருக்கும் குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் வடிவேல் படத்தின் பிரபல வசனமான 'வரும் ஆனா வராது' என்று சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.