அதிமுக கூட்டணியில் உள்ள தமிழக பாஜக சென்னையில் 6 தொகுதிகள் உள்ளிட்ட 38 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தற்போதே  அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  மாவட்ட வாரியாக தொகுதிகளை தேர்வு செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 38- தொகுதிகளில்  போட்டியிட  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமைக்கு தமிழக பாஜக அனுப்பியதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் 6 தொகுதிகள் மற்ற மாவட்டங்களில் 32 தொகுதிகள் என மொத்தம் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பட்டியலை அதிமுக தலைமைக்கு பாஜக தலைமை விரைவில் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி எந்த தொகுதி மற்றும் யார் யாரெல்லாம் போட்டியிட இருக்கிறார்கள் என்பதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகை குஷ்பு, தியாகராய நகர் தொகுதியில் ஹெச்.ராஜா, மயிலாப்பூர் தொகுதியில் கரு நாகராஜன், துறைமுகம் தொகுதியில் வினோஜ் செல்வமும், செங்கல்பட்டு தொகுதியில் டி.கே.ராகவன், திருவண்ணாமலை தொகுதியில் தணிகைவேல், போளூர் தொகுதியில் ஏழுமலை, ராசிபுரம் தொகுதியில் விபி துரைசாமி, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.