தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகிய பணிகள் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மற்றொருபுறம் பணப்பட்டுவாடா, சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஆகிய செயல்களை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது பின்பற்றுவதற்காக தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,
- சனி, ஞாயிற்று கிழமைகள் தவிர பிற நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
- வேட்பு மனு விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்று, கம்பியூட்டரிலேயே தட்டச்சு செய்து, நகல் எடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். நேரில் வேட்புமனு பெற விரும்பினால் ஒருவர் மட்டுமே வர வேண்டும்.
- கொரோனா பரவல் காரணமாக வேட்புமனுவிற்கான டெபாசிட் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரமாகும், மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயம்.
- வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 5 பேருக்கு பதிலாக 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிறர் 100 மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்படுவர்.
- வேட்பு மனுத்தாக்கலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்தில் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வாகனத்தில் வரக்கூடாது.
- ஒவ்வொரு தொகுதிகளிலும் 2 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்
- . வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 20ம் தேதியும், வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதியும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
