கவர்னர் உரை ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.

இதற்காக அவர், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச்செயலகத்துக்கு காரில் வருகிறார். அவரை சபாநாயகர்.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, சட்டசபை கூட்ட அரங்கிற்கு அழைத்து வருகின்றனர்.

காலை 10 மணிக்கு தனது உரையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்குகிறார். ஆங்கிலத்தில் இடம் பெறும் அவரது உரை சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் தெரிகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி முடித்ததும், அவரது ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்து சபாநாயகர் ப.தனபால் பேச இருக்கிறார்.

அத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவு பெறுகிறது. இன்று மதியம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

நாளை நடைபெறும் கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்கள்  கருணாநிதி (திருவாரூர்), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இரங்கல் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட இருக்கிறது.

அதன்பின்னர், 4-ந்தேதி காலை 10 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடும் என தெரிகிறது. அன்றைய தினம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். திங்கட்கிழமை (7-ந்தேதி) மீண்டும் தொடங்கும் சட்டசபை கூட்டம் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் முடிவுக்கு வரும். அடுத்து 2019-2020-ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை தாக்கல் செய்வதற்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியிலோ, அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ மீண்டும் சட்டசபை கூட இருக்கிறது.

இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில், எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். மாவட்ட வாரியாக கவர்னர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க. உறுப்பினர்கள், கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று உரை நிகழ்த்தும் போது, தங்களது எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் உத்தரவிட அவர்கள் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இதேபோல், ‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்காதது, மேகதாது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளையும் தி.மு.க. எழுப்பும் என்று தெரிகிறது.

எனவே, இன்றைய சட்டசபை கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என தெரிகிறது. அனேகமாக, கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் என்று கூறப்படுகிறது.