தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பளரான தமிழிசை சௌந்தர் ராஜன், கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். 

இதில் தமிழிசை மனுவுக்குப் பதிலளிக்கும்படி கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கைச் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில் செப்டம்பர் 8 ஆம் தேதி தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழிசை சார்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழிசையின் இந்த திடீர் முடிவுக்கு பல காரணங்கள் சொல்ப்பட்டாலும் இது தான் ஆச்சிரியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவராக ஆளுநர் வரையறுக்கப்படுகிறார். 

நீதிமன்றம் அழைத்தாலும் கூட தான் வரமாட்டேன் என்று ஒரு ஆளுநரால் சொல்ல முடியும். எவ்வாறு சபாநாயகர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தான் ஆஜராக அரசியல் சட்டம் அளித்த வாய்ப்பின்படி தவிர்க்க முடியுமோ அதேபோல ஆளுநரும் நீதிமன்ற வரம்பிற்கு அப்பாற்பட்டவர். 

அதனால் ஆளுநராக இருந்துகொண்டு தேர்தல் வழக்கு நடத்துவது என்பது மரபு மீறிய நடைமுறையாகக் கருதப்படுகிறது. மேலும்  ஆளுநர் என்ற அரசியல் சாசனப் பதவிக்கு அவர் குந்தகம் விளைவிக்க விரும்பாததாலும் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.