இங்கு எந்த வகையில் இந்தி திணிக்கப்படாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை அதிகாரிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், அந்த சுற்றறிக்கைக்கு எதிராக தமிழகத்தில் கிளர்ந்த எதிர்ப்பின் காரணமாக, மேற்கண்ட அறிவிப்பினை திரும்ப பெற்றது தென்னக ரயில்வே. 

இந்த நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலத்தையே அலுவலர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்திட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்ட விவகாரம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "இன்று மத்திய இரயில்வே அமைச்சகத்தை தொடர்புகொண்டு, தென்னக இரயில்வேசார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென (ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் கருத்துகள் பரிமாற்றிக்கொள்ளவேண்டும்) வலியுறுத்தப்பட்டது. எந்த வகையிலும் இந்தி திணிக்கப்படாது" என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், தமிழக ரயில் நிலையங்களில் தமிழ் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.