தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்து விலகும் படி ஓபிஎஸ் கட்டாயப்படுத்தப்பட்டார் , தாக்கப்பட்டார் என்று தமிழிசை அதிரடியாக புது குண்டை தூக்கி போட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நிலையான , ஊழலற்ற ஆட்சியைத்தான் பொதுமக்கள் விரும்புகிறார்கள். கவர்னர் தாமதிக்கிறார் என்று விமர்சனம் வைக்கிறார்கள் இதில் கவர்னரை குற்றம் சாட்டுவதை ஏற்றுகொள்ளமாட்டேன்.
எதற்காக நீங்கள் அவசரப்படுகிறீர்கள் , நல்லாத்தானே ஓபிஎஸ் ஆட்சி நடத்தினார். ஏன் முதல்வரை மாற்றும் விஷயத்தில் அவசரப்படுகிறீர்கள். இதை யாராவாது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டு வந்து சொல்லுங்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த நிலையில் உள்ளனர், என்ன மன நிலையில் உள்ளனர் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள். இவ்வளவு நாள் பொறுத்தவர்கள் ஏன் சில நாள் பொறுத்துகொள்ள கூடாது.
வழக்கு தீர்ப்பு வர உள்ளது என்று கூறுகிறார்கள் ஏன் அவசரப்பட வேண்டும்.
ஆனால் ஜெயலலிதா இருந்த போது அவர் ஆதரவு எம்.எல்.ஏ பட்டியலை அளித்தவுடன் அழைக்கப்பட்டாரே?
அன்று இருந்த சூழ்நிலையையும் இன்றிருக்கிற சூழ்நிலையையும் ஒன்றாக ஏன் பார்க்கிறீர்கள் . இப்போது ஏன் அவசரப்படுகிறீர்கள் , இப்போது இருப்பவரே ராஜினாமா செய்ததிலேயே பிரச்சனை இருக்கிறதே, நான் மிரட்டப்பட்டேன் , தாக்கப்பட்டேன் என்று சொல்லும்போது நான் விளக்கம் கேட்கிறேன் , அதை பற்றி பதில் சொல்ல மறுக்கிறார்களே.
ஓபிஎஸ் தாக்கப்பட்டேன் என்று சொல்லவில்லையே? சொன்னார் ,அவர் மிரட்டப்பட்டார் தாக்கப்பட்டார் .
அவர் தாக்கப்பட்டேன் என்று சொல்லவில்லையே?
தாக்குதல் என்பது மனத்தாக்குதல் ,உடல் தாக்குதல் எல்லாம் ஒன்றுதான்.என்னிடம் வந்து இதைப்பற்றி விவாதிக்காதீர்கள்.
இதற்கு பின்னால் பாஜக கை இருக்கு , திமுக கை இருக்கு என்கிறார்கள். அதிமுக கை இருக்கு என்கிறேன். ஆளுநர் மீது குறை சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நம்பிக்கை இல்லாத சூழ்நிலை என்பதை முடிவு செய்யட்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை முடிவு செய்யட்டும்.
மக்கள் விரும்பும் முடிவு என்கிறீர்களே அது என்ன?
மக்கள் ஒரு நேர்மையான முடிவைத்தான் விரும்புகிறார்கள்.புறவாசல் வழியாக வருகிறார்கள். தமிழக அரசியல் சூழ்நிலையில் ஊழலற்ற நிரந்தர ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள்.

இவ்வாறு தமிழிசை பேசினார். ஓபிஎஸ் தாக்கப்பட்டார் என்று திகில் கிளப்பிய தமிழிசை பின்னர் தாக்குதல் என்றால் மனோ ரீதியாக தாக்குதல் ஆகவே அதுவும் தாக்குதல்தான் என்று மழுப்பி விட்டு போனார்.
