பின்புலம், குற்றச்சாட்டு இல்லாமல் யாரும் கைது செய்யப்படுவது கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார். சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி இன்று கைது செய்யப்பட்டது குறித்து தமிழிசை சௌந்திரராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமூக செயற்பாட்டாளர் திவ்யபாரதி மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார். சமூக செயற்பாட்டாளரான இவர், கக்கூஸ் என்ற ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். தீண்டாமை, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைக்கு எதிராக திவ்யபாரதி தொடர்ந்து போராடி வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரையில் மாணவர் விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் பாம்பு கடித்து இறந்தார். அவர் உயிரிழந்ததற்கு உரிய இழப்பீடு கேட்டும், விடுதியை பராமரிக்கக் கோரியும் சக மாணவர்களுடன் திவ்யபாரதி போராட்டம் நடத்தினார்.

இது தொடர்பாக திவ்யபாரதி மீது வழக்கு ஒன்று பதியப்பட்டது. இந்த நிலையில், திவ்யபாரதி இன்று மதுரையில் கைது செய்யப்பட்டார். அவரின் கைதுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், பின்புலம், குற்றச்சாட்டு இல்லாமல் யாரும் கைது செய்யப்படுவது கிடையாது என்று கூறியுள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி, நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.