இரட்டையாக உள்ள அணிகள் இணைந்தால், இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கும், தற்போது இரு அணிகள் இணைவதற்கும் நாங்கள் பொறுப்பல்ல. இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுவது மக்களின் நலனுக்காகவே. இதற்காக அதிமுகவை, பாஜக ஆட்டி வைக்கிறது என கூறுவது தவறான கருத்து.

சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதில்லை, மு.க.ஸ்டாலினுக்கே நம்பிக்கை இல்லை.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நினைப்பில் உள்ள மு.க.ஸ்டாலின், சட்டத்தை காப்பாரா அல்லது சட்டையை கிழித்து கொண்டு அவர் வெளியே வருவாரா என தமிழக மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

அதிமுகவில் இரு துருவங்களாகவும், இரு அணிகளாகவும் இருக்கிறார்கள். இந்த அணிகள் ஒன்று சேர்ந்தால், மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மக்களுக்காகவே இரட்டையாக உள்ள அணிகள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால், நிச்சயம் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதனை மக்களும் ஏற்று கொண்டார்கள். அதை வரவேற்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சியினர் சிலர், இதை மறைத்து பேசுகின்றனர். யார் என்ன பேசினாலும், தமிழக மக்கள், பாஜகவை ஏற்று கொண்டு இருக்கிறார்கள் என்பது நிரூபனமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.