லடாக் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என தெலுங்கான ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 3  ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் இந்திய வீரர்கள்தான்  சீன எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என வழக்கம்போல் சீனா பிரச்சனையை திசை திருப்ப முயற்ச்சி செய்துவருகிறது. இரு நாட்டுக்கும் இடையை அமைதி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் மூவர் சுட்டுக் கொள்ளப்பட்டிருப்பது நாட்டை கொந்தளிப்படைய வைத்துள்ளது. 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என சீனா முன்வந்ததையடுத்து, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முன்வைத்த பல்வேறு கருத்துக்களை ஏற்றுக் கொண்ட சீனா, பாங்கொங் த்சோ ஏரிப்பகுதி மற்றும் விரல்-4 பகுதி விவகாரத்தில் உடன்பட மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் பாங்கொங் த்சோ ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு, சீன அதிகாரி தலைமையில் ஒரு குழு இந்திய எல்லைக்குள் அத்துமீறியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும், சீன படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சீன ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி உட்பட  3 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். 

அதில் ஒரு வீரர் ராமநாதபுரம்  மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பல்வேறு அரசியில் கட்சியினர், பிரபலங்கள் ராணுவ வீர்களுக்கு உணர்வுபூர்வமாக வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தெலங்கான ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன், லடாக் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு நாட்டிற்காக வீரமரணமடைந்த வீரரை இந்நாட்டிற்கு அளித்த பெருமை கொண்ட குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டைப் பாதுகாப்பதற்காக வீரமரணமடைந்த அவரது வீரமும், தியாகமும் என்றளவும் அனைவரின் மனதிலும் துதிக்கப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.