வன்முறை குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆரப்பாட்டத்தில், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஹெச். ராஜா, தமிழகத்தில் பள்ளிகளைவிட மதுக்கடைகள் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டினார். நீட் தேர்வில் மாணவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்காதது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பின்னர், பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் பாஜக மலர்ந்து வருவதாக கூறினார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது கல் வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், வன்முறை குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை என்றார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல், பின்னர் சட்டமன்ற தேர்தல் வர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.