வேலூர் தொகுதியில் வரும் 5-ஆம் தேதி மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். நேற்று ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையிலும், தனியார் திருமண மண்டபத்திலும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

இந்த கூட்டங்களுக்கு முறையான அனுமதி பெறவில்லை என ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, முஸ்லிம் தலைவர்களுடன் ஸ்டாலின் கூட்டம் நடத்திய திருமண மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’தேர்தல் என்று வரும் போது எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எல்லாம் ஒன்றுதான். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்திய மண்டபம் பூட்டப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறவில்லை என்றே தெரிகிறது.

தேர்தல் நேரத்தில் யாராக இருந்தாலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். அப்படி நடக்காததால் வழக்கு போடப்பட்டுள்ளது. வேலூரில் தேர்தல் முறைகேடுகள் நடப்பதற்கும், தாமதமாக தேர்தல் நடப்பதற்கும் தி.மு.க.வே காரணம். சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது’’ என அவர் கூறினார்.