முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவில் இணைவதாக வரும் தகவல்கள் யூகங்கள்தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை, தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாஜகவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணையப்போவதில்லை என்றும் அது குறித்து வெளியாகும் தகவல்கள் யூகங்கள்தான் என்றும் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் துறையிலுள்ள தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்த்து விட்டு, பிறகு அரசியல் பேசட்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த, பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷா இந்த மாதம் 22, 23, 24 ஆம் தேதிகளில் தமிழகம் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், உணவு பாதுகாப்பு திட்டத்தால், அரிசி கிடைக்காது என்பது தவறான தகவல் என்றார். மத்திய அரசின் நல்ல திட்டங்களை மாநில அரசு மக்களிடம் எடுத்து செல்வதில் என்ன தவறும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.