தமிழிசை – பொன்.ராதாகிருஷ்ணன் இடையே இருந்து வந்த மனஸ்தாபம் இன்று (07-07-2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சென்னையில் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது பா.ஜ.க சார்பில் ரெட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பா.ஜ.க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற கிண்டி காந்தி மண்டபத்திற்கு முன்கூட்டியே வந்துவிட்டார் பொன்னார்.

ஆனால் தமிழிசை வருவதற்கு சற்று தாமதமானது. இதனால் பொன்னார் மணிமண்டபத்திற்குள் சென்று ரெட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்திவிட்டார். சற்று தாமதமாக அங்கு வந்து சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜனை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் மணி மண்டபத்திற்கு முன்பாக இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை, அங்கிருந்த தொண்டர்களிடம் நிர்வாகிகள் எங்கே? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நிர்வாகிகள் அனைவரும் பொன்னாருடன் மணிமண்டபத்திற்குள் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த தமிழிசை, ஏன் தான் வரும் வரை காத்திருக்க முடியாதா? அதற்குள் அவசரமா? என்று கேட்டுவிட்டு அங்கிருந்து கோபமாக புறப்பட தயாரானார். ஆனால் தொண்டர்கள் சிலர் வந்தது வந்துவிட்டீர்கள், மணிமண்டபத்திற்கு வெளியே உள்ள ரெட்டைமலை சீனிவாசன் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று கூறினர். இதனால் நாகரீகம் கருதி படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து வேக வேகமாக புறப்பட்டார்.

பா.ஜ.கவின் முக்கிய தலைவரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், மணிமண்டபத்திற்குள் இருந்த நிலையிலும், ஒரு மரியாதைக்கு கூட உள்ளே செல்லாமல் தமிழிசை வேகவேகமாக சென்றதற்கு காரணம் பொன்னார் மீதான அதிருப்தியே காரணம் என்று சொல்லப்படுகிறது. நேற்று (6-7-2018) காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் பா.ஜ.கவில் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்தார். இதைப்பற்றிய தகவலை கூட பொன்னார் தரப்பு தமிழிசையிடம் சொல்லவில்லை.

மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் மாற்றம் என்கிற தகவலை ஊடகங்கள் மூலமாக பரப்புவதும் பொன்னார் தரப்பு தான் என்று தமிழிசைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் கடும் கோபத்தில் இருந்த தமிழிசை வருவதற்குள் ரெட்டைமலை சீனிவாசனுக்கு பொன்னார் மரியாதை செய்ததால் தற்போது இருவருக்கும் இடையிலான புகைச்சல் பகிரங்கமாக வெடித்துள்ளது.