2 படம் எடுத்துட்டா போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து கொள்கின்றனர் என இயக்குனர் பா.ரஞ்சித்தின் ராஜராஜ சோழன் பற்றிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார்.

அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஜராஜ சோழன் குறித்து பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ரஞ்சித் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியதால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்ததை அடுத்து  ரஞ்சித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், வரும் 19ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.  
 
இந்நிலையில், ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்எல்லோரும் மதிக்கும் தமிழக வரலாற்றை திரித்து நாகரிகமற்ற முறையில் கூறுவது தவறு என்றார். 

வரலாற்று ஆதாரம் இல்லாமல் பிரிவினை ஏற்படுத்துவதை போல போகிற போக்கில் பேசுவதை சிலர் நிறுத்தி கொள்ள வேண்டும். ரஞ்சித் விளம்பரத்திற்காகவும் பிரிவினையை தூண்டுவதற்காகவும் பேசியிருக்கிறார்.  இவங்கல்லாம், 2 படம் எடுத்துவிட்டா போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்து கொள்கின்றனர். இப்படிப்பட்டவங்க தான் பட்டியலின மக்களுக்காக போராடுவதாக கூறி பிரிவினையை தூண்டிவிடுகிறார்கள் என காட்டமாக கூறியுள்ளார்.