சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5  மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. கொரோனா தொற்று ரஜினியின் அரசியல் எண்ட்ரிக்கு முட்டுக்கட்டையாக வந்துவிட்டது. தன் உடல் நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடுவதிலிருந்து ரஜினி ஜகா வாங்க தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், பிப்ரவரிக்குள் ரஜினியை எப்படியும் அரசியலுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் அவருடைய ஆதரவாளர்கள் செயல்பட்டுவருகின்றனர்.


அந்த வகையில் ரஜினியை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினி அரசியலுக்கு வர இரண்டு மாதங்கள் போதுமானது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ரஜினி அரசியலை விட்டுவிட்டேன், கட்சியே தொடங்கமாட்டேன். தேர்தலில் நிற்கமாட்டேன், ஒதுங்கிவிட்டேன் என்று அவர் எங்கும் இதுவரை சொல்லவில்லை. தேர்தல் மே மாதம்தான் வர உள்ளது. இது என்ன அந்தக் காலமா? இது டிஜிட்டல் யுகம். அரசியலுக்கு வர ரஜினிக்கு இரண்டு மாதம் போதும். அதனால், அவர் அரசியலுக்கு வரலாம்.

 
ஆனால், இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது. நான் அரசியலுக்கு வரவில்லை. பொதுவாழ்க்கைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை ரஜினியாக சொல்கிற வரை அவரைப் பற்றி பேச நான் உள்பட யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.” என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.