நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் நேற்றும் இன்றும் பதவி ஏற்று வருகின்றனர். 

அந்த வகையில் தமிழகத்திலிருந்து வெற்றி பெற்ற எம்பிக்கள் ஒவ்வொருவராக இன்று பதவி ஏற்றனர். நேற்று  பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, கனிமொழி, தயாநிதி மாறன், திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன், என அனைவரும் ஒவ்வொன்றாக இன்று பதவி ஏற்க வந்தனர். அப்போது தமிழில் பேசிய பதவி ஏற்றனர். பதவி ஏற்றபின் தமிழ் வாழ்க என கூறி முடித்தனர். தமிழ் வாழ்க என  உறுதிமொழி எடுத்த தமிழக எம்.பிக்களுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் அப்போது கோஷமிட்டனர். தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும் பாஜக எம்பி களும் பாரத் மாதா கி ஜே என பதிலுக்கு கோஷமிட்டதால் லோக்சபாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதேவேளையில் தமிழ் வாழ்க ஹேஸ்டேக் ட்விட்டர் பக்கத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் தமிழில் பேசியே பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.