சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி, குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்துக்கொண்டேன் என்றார். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. அதை காலம் பதில் சொல்லும் என்றார். 

மேலும் எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. குடும்பம் தொடர்பானது அல்ல. அனைத்திற்கும் காலம் பின்னால் பதில் சொல்லும் என்று சூசுமாக பதிலளித்துள்ளது திமுக அரசியல் வட்டாரத்தி்ல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் தற்போது திமுகவில் இல்லை. அதனால் நாளை நடைபெற போகும் செயற்குழு பற்றி எனக்கு தெரியாது. மீண்டும் திமுகவில் இணைவது பற்றி எனக்கு தெரியாது என்றார். 

கருணாநிதியின் உண்மையான விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர் என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் மீண்டும் இணைந்து செயல்படுவீர்களா என்ற நிரூபர்கள் கேள்விக்கு திமுகவில் மீண்டும் இணைவது குறித்து எனக்கு தெரியாது என்று அழகிரி பதிலளித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் அக்கட்சி தலைவராக உருவெடுத்து வருகிறார். இந்நிலையில் அழகிரி தனது பக்கம்தான் திமுக விசுவாசிகள் உள்ளதாக கூறியுள்ளது திமுக தொண்டர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.