கேரள அரசு வழங்க முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வேண்டாம் என தமிழக அரசு மறுத்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் நிலையில், கேரள அரசு தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை தமிழகத்துக்கு வழங்க முன் வந்தது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் அலுவலக செயலாளரை கேரள முதல்வர் அலுவலக செயலகம் தொடர்புகொண்டது. ஆனால், தற்போதைக்கு தண்ணீர் தேவையில்லை என கேரள அரசுக்கு தமிழக அரசு பதில் அனுப்பியதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான செய்திகள் மீடியாக்களில் வெளிவந்தன. சமூக ஊடகங்களில் இதுபற்றி சூடான விவாதம் கிளம்பியது. இந்நிலையில் கேரளாவின் உதவியை தமிழக முதல்வர் மறுத்ததாக வெளியான செய்திக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கேரள அரசு ஒரு முறை 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க அனுமதி கேட்டது. ஆனால், 20 லட்சம் லிட்டர் தண்ணீர் உதவியை கேரளாவிடம் கோரினோம். அதன் தேவை இல்லாமலேயே தற்போது சமாளித்துவருகிறோம்.

 
மேற்கொண்டு தண்ணீர் தேவைப்பட்டால் கேரளாவின் உதவி கோரப்படும். கேரளாவின் உதவியை தமிழக முதல்வர் வேண்டாம் என மறுத்ததாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. குடிநீர் தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தமிழக அரசின் முடிவு அறிவிக்கப்படும்” என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.