சண்டிகர் மருத்து கல்லூரியில்  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முதுகலை மாணவர்  ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வட மாநிலங்களில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்தவர் ராமசாமி. கோவில் குருக்களாக பணியாற்றி  வரும் அவரது மகன்  கிருஷ்ணபிரசாத் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த இவர்,  பின்னர் முதுகலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

6 மாதங்களுக்கு முன்பு சண்டிகாரில் உள்ள மத்திய அரசின் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பொது மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணபிரசாத் பெற்றோருக்கு கல்லூரியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, கல்லூரி விடுதியில் கிருஷ்ணபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் சண்டிகார் சென்றுள்ளனர்.

கிருஷ்ண பிரசாத்தின்  சாவில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரசாத் போனில் பேசும்போது, இந்தி மொழி கடினமாக உள்ளது என்று மனக்குழப்பத்துடன்  இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக வட இந்தியாவுக்கு முதுகலை மருத்துவம் படிக்க செல்லும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஏற்கனேவே சரவணன், சரத்பிரபு ஆகியோர் இதே போன்று மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

வட மாநிலங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் தகவல்களைப் பெற்று அவர்களுக்கு உரிய கவுன்சீலிங் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.