நீதிமன்றத்தை இழிவாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெச்.ராஜா மீதான புகாரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 4 வாரங்களுக்குள் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை குறிப்பிட்ட ஒரு தெருவுக்குள் அனுமதிக்க மறுத்த காரணத்தினால் போலீசாருடன் ஹெச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது தான் உயர்நீதிமன்றத்தை கடும் சொல்லால் ஹெச்.ராஜா விமர்சித்திருந்தார். ஹெச்.ராஜா சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். 

சுமார் 3 நிமிட வீடியோ காட்சிகள் மட்டும் தான் வெளியாகியிருந்தன. அதில் போலீசார் அனைவருமே கரப்ட், மாற்று மதத்தினரிடம் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் காசு வாங்குபவர்கள், போலீஸ்கார்கள் பெரும்பாலும் ஆன்ட்டி இந்துக்கள் என்றெல்லாம் சகட்டு மேனிக்கு பேசியிருந்தார். மேலும் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சைக்கு வித்திட்டது. வாக்குவாதத்திற்குப் பின் நீதிமன்றத்தின் தடையையும் மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தனர். 

இந்நிைலயில் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள ஹெச்.ராஜா, அந்த வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை. யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து ஹெச். ராஜா உள்ளிட்டோர் மீது பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும், அவர்களை கைது செய்ய திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப் பட்டுள்ளன.

 

இதனிடையே நீதிமன்றத்தை இழிவாக பேசிய புகாரில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெச்.ராஜா மீதான புகாரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.