’பா.ஜ.க.வினரை விமர்சிக்க வேண்டாம்!’ என்று அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி கட்டளையிட்டிருப்பதான தகவல் வெளியான பின் கடந்த இரண்டு நாட்களாக மற்றொரு தகவலும் தமிழக அரசியலை சுழன்றடிக்கிறது. அது ‘எதிர்வரும் தேர்தல்களில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நிச்சயம் கூட்டு சேரும்!’ என்பதுதான்.

பன்னீர்தானே பா.ஜ.க.வின்  வளர்ப்புப் பிள்ளை! பின் எப்படி எடப்பாடி அணியுடன் கூட்டு? என்று நீங்கள் கேட்பது புரிகிறது! ஆனால் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கைகுலுக்கும் முன், எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் இரண்டற கலந்துவிடுவார்கள் என்றே தகவல். 

ஆக தாமரையும், இலையும் டை அப் போடும் எனும் பேச்சை வலுவூட்டுவது போல் இன்னும் சில சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்தில் திருவாய் மலர்ந்த மத்தியமைச்சர் பொன்னார், ‘தமிழகத்தில் பொதுத்தேர்தல் வரக்கூடாது என்பது எனது கருத்து.’ என ஒரு ஸ்டேட்மெண்டை உதிர்த்திருக்கிறார். அந்த பேட்டியின் போது ‘எனது கருத்து, எனது கருத்து’ என்று அழுத்தியழுத்தி சொல்லியிருப்பதன் மூலம், தமிழக அரசியல் சூழலில் டெல்லி பா.ஜ.க.வின்  அழுத்தமோ அல்லது கவனமோ எதுவுமில்லை, தமிழக பா.ஜ.க.தான் விமர்சனங்களை வழங்கிக் கொண்டிருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே பொன்னாரின் நோக்கம் என்று படுகிறது. 

அதே நேரத்தில் அரசியலில் ஒரு விஷயத்தை இல்லையில்லை என்று மறுப்பதே நிச்சயம் இருக்கிறது என்கிற அர்த்தம் தானே? பொதுதேர்தல் வரக்கூடாது, வரக்கூடாது என்று சொல்வதே பொதுதேர்தல் பற்றிய ஒரு மன நிலையை மக்கள் மத்தியில் உருவாக்கும் முயற்சியாக கூட எடுத்துக் கொள்ளலாம். 

பொன்னாரின் வார்த்தைகள் போதாதென்று, கடந்த 10_ம் தேதியன்று வானதி சீனிவாசன் வேறு தமிழக முதல்வரை சந்தித்திருக்கிறார். கொங்கு மண்டலத்தில் அணைகளை தூர் வாருவது உள்ளிட்ட நீர்நிலை மராமத்து பணிகள் தொடர்பான கோரிக்கைகளையும், அவினாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பான மாற்று திட்டத்தையும் கொடுத்திருக்கிறார். 

வானதி சீனிவாசனிடம் முதல்வரும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள நீர்திட்டங்கள் குறித்து விரிவாகவும், முக மலர்ச்சியுடனும் பேசி பல தகவல்களை கொடுத்திருக்கிறார். கூடவே வானதி டீமின் கோரிக்கையையும் பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார். 

ஆக இப்படி அடுத்தடுத்து நடக்கும் மூவ்கள் இலையின் பங்கேற்பில் தாமரை மலரும் என்கிற மாதிரி பிம்பத்தையே காட்டுகின்றன. 

கூட்டணி வைப்பதும், வைக்காமல் போவதும் இரண்டு கட்சிகளின் விருப்பம்! ஆனால் அதேநேரத்தில் ஓட்டு போடப்போவது மக்கள்தான் அவர்களிடம் இது தொடர்பாக சில கேள்விகள் இருக்கின்றன. 

அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளாக இரண்டு கழகங்களும்தான் தமிழகத்தை பாலைவனமாக்கிவிட்டதாக பா.ஜ.க. நேற்று வரை சாடி வந்துள்ளது. இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்தால், தமிழகம் பாலைவனமாவதில் தப்பில்லை என்று தமிழக பா.ஜ.க. ஏற்றுக்கொள்வது என்றாகிவிடாதா?

விஜயபாஸ்கர் வீட்டின் ரெய்டு துவங்கி அ.தி.மு.க. சிக்கலில் சிக்கிய பல சூழல்களில் தமிழிசையும், ஹெச்.ராஜாவும் அ.தி.மு.க.வை பொளந்து கட்டி வந்திருக்கிறார்கள். ஊழல், ஊழல் என்று அக்கட்சியை பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். நாளைக்கே அ.தி.மு.க.வுடன் கூட்டு என்றால், ஊழல் கட்சியின் தோலில் கையை போட்ட பா.ஜ.க.வை நேர்மையானவன் என்றா மக்கள் நினைப்பார்கள்? யோக்கியன் வர்றான் சொம்பை தூக்கி உள்ள வை...என்று காதுபட பேசிவிடமாட்டார்களா?

சர்க்காரியாவில் ஆரம்பித்து ஆ.ராசா விவகாரம் வரை  எல்லாவற்றையும் பேசி தி.மு.க.வை இப்படித்தான் என்றில்லாமல் கிழித்தெடுக்கிறது பா.ஜ.க. ஒருவேளை அ.தி.மு.க.வுடன் இவர்கள் கூட்டு வைத்தால் சும்மா விடுமா தி.மு.க.? பல்வேறு நிலைகளில் அ.தி.மு.க. பற்றி பா.ஜ.க. வைத்த விமர்சனங்களையெல்லாம் வீதிக்கு வீதி சொல்லிக்காட்டி பிரச்சாரம் செய்துவிடமாட்டார்களா? 

அ.தி.மு.க.வுடன் கைகோர்ப்பது என்பது பா.ஜ.க.வின் பச்சை சந்தர்ப்பவாதம் என்பதை தவிர வேறு வார்த்தைகளில் விமர்சித்துவிட முடியாது! இத்தனை நாட்களாய் ரெய்டையும், போலீஸையும் ஏவியது அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு அடிபணிய வைக்கத்தான் என்கிற விமர்சனம் உண்மையாகி போகும். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீது சட்டென்று தீர்ப்பு வழங்கி சசியை வேண்டுமென்றே மோடி உள்ளே தள்ளியதாக பரப்பப்படும் தகவல்களை மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள்.

இரட்டை இலையை முடக்கியதும், இரட்டை இலையை மீட்க தினகரன் லஞ்சம் கொடுத்ததாக கிளப்பிவிட்டதும், அதன் அடிப்படையில் அவரை கைது செய்ததும் பா.ஜ.க.வின் மோசமான அரசியல் என்று பேசப்படுவதும் நிதர்சனமாகிவிடும். 

இதற்கெல்லாம் மேலே உடைப்பு, கவிழ்ப்பு, சிறைவைப்பு போன்றவற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தினகரன், தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துவிடுவார்... இதற்குத்தான் ஆசைப்படுகிறதா பா.ஜ.க.?!