தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை உடனே வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் குறைந்தபட்சம் 10 நாள்களுக்குத் தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடர்ந்து நடத்த ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு, இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய பயனாளிகள் காத்திருப்பதைத் தவிர்க்க தமிழகத்துக்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும். 

ஒரு சில மாநிலங்கள் ரெம்டெசிவிர் மருந்தை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பாமல் தடுக்கும் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ரெம்டெசிவர் மருத்துகள் தமிழகத்திற்குள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.