டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதில் 18 எம்எல்ஏக்கள் பதவியை பறித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகையால் எடப்பாடி ஆட்சி தப்பியது. தகுதி நீக்கம் செய்ததில் எந்தத்தவறும் இல்லை என்று நீதிபதி சத்தியநாராயணா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனபால் முடிவில் எந்த தவறும் இல்லை என நீதிபதி கூறியுள்ளார். மேலும் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 18 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல்,  தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது 2 நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பபை வழங்கினர். 

தலைமை நீதிபதி, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பேரவைத் தலைவர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தீர்ப்பளித்தார். நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பில், இயற்கை நியதிக்கு எதிராக பேரவைத் தலைவர் முடிவு எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்வதற்கு முன் 18 பேருக்கும் போதிய வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார்.

 

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் தீர்ப்பில் இறுதி முடிவை எட்ட இந்த வழக்கை 3வது  ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும். இதையடுத்து,  எம்.சத்யநாராயணனை 3வது நீதிபதியாக நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்குகளை விசாரித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த  வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். 

 முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு  தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, வக்கீல் திருமாறன் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 31ம் தேதி தள்ளிவைத்தார். இந்நிலையில் தற்போது 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 எம்எல்ஏக்கள் பதவியை பறித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 18 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.