ஏற்கனவே முதல்வர் உள்பட 4 அமைச்சர்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ள நிலையில், மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பார்வையிடவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளுக்கு செப்டம்பர் 28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். லண்டனில் 4 நாட்கள் இருந்த முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். லண்டனில் நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில், அங்கிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவுக்கு சென்றார். 
முதல்வருடன் இணைந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத் ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றனர். இவர்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 9-ல் சென்னைத் திரும்ப உள்ளார்கள்.
முதல்வருக்கு முன்பாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியாவுக்கு சென்றுவந்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ரஷ்யாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்று சென்று சென்னை திரும்பிவிட்டனர். 
இந்நிலையில், மேலும் 2 அமைச்சர்கள் வெளிநாடு புறப்பட்டு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நேற்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்கள். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக சொந்தப் பயணமாக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், எகிப்து நாட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் பாண்டியராஜன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமைச்சராக இருப்பவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர். 15 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக இருந்திருக்கும் ஜெயலலிதா, முதல்வராக இருந்த காலத்தில் வெளிநாடு சென்றதே இல்லை. அமைச்சர்கள் சொந்த பயணமாக வெளி நாடு செல்ல வேண்டும் என்றால்கூட முதல்வர் அலுவலகத்தில் அனுமதி பெற்றுவிட்டுதான் செல்ல முடியும். ஆனால், தற்போது அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுவதால், வெளிநாடுகளுக்கும் சென்றுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.