உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 2வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமான நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு அமைச்சரை பொறுப்பாளராக நியமித்தார். அதனடிப்படையில் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு களப்பணியாற்றி வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், அமைச்சர் தனக்கு கொரோனா இல்லை. காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்றேன் என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில். அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு 2வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.