அதிமுக அணிகளுக்கிடையே நடைபெற்ற குழப்ப நிலையால், ஆட்சி நீடிக்குமா என்ற நிலை ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் நிலை குறித்து எதிர்கட்சிகள் கூர்ந்து நோக்கி வந்தன.

முன்னதாகவே திமுக, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோருவதாக முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், துரைமுருகனின் ஆலோசனையால், அந்த யோசனை தள்ளி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு காரணமகா டிடிவி தினகரன் அணியினர் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்தனர். இதுநாள்வரை எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர்கள் ஆளுநரிடம் கடிதம்
கொடுத்துள்ளனர்.

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதற்காக தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றார்.

22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு சூழ்நிலை வந்தால் திமுக நல்ல முடிவு எடுக்கும் என்றும், தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரி மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளர். அந்த கடிதத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில்
கூறியுள்ளார். பேரவைக் கூட்டம் தாமதிப்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.