தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளும் சிகிச்சை பணிகளும் சிறப்பாக செய்யப்பட்டுவரும் நிலையில், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பரிசோதனைகளும் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டுவருகின்றன. 

நேற்று 5880 டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 7707 டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 66 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1755லிருந்து 1821ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக, தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. நேற்று 114 பேர் குணமடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் 94 பேர் குணமடைந்ததையடுத்து மொத்தமாக தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 960ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவிலேயே அதிகமானோர் குணமடைந்த மாநிலம் தமிழ்நாடு தான். இன்று கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 80110 சாம்பிள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றைக்கு அதிகபட்சமாக 7707 பேருக்கு டெஸ்ட் செய்துள்ளோம். இன்னும் சில தினங்களில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டெஸ்ட் நம்மால் செய்ய முடியும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் இருந்த நிலையில்,, மேலும் 7 ஆய்வகங்களுக்கு அனுமதி பெற்று தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே மொத்தம் 41 ஆய்வகங்கள் இப்போது உள்ளன. இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தான் அரசு பரிசோதனை மையங்கள் அதிகம் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.