தமிழ்நாடு கொரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவருகிறது. பரிசோதனை எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று 5882 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் 72 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1755ஆக அதிகரித்துள்ளது. 

பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட பின்பு தினமும் சராசரியாக 6500க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இல்லாமல் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. இந்தியாவிலேயே தற்போது தமிழ்நாட்டில் தான் அதிகமான கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. 

தமிழ்நாட்டில் 34 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதுதான் இந்தியாவிலேயே அதிகம். அதனால் தமிழ்நாட்டில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமானோர் பரிசோதனை செய்யப்படுகின்றனர். பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ள இந்த சூழலில், தமிழ்நாடு அதை சிறப்பாக செய்வதுடன், சிகிச்சையிலும் சிறந்து விளங்குகிறது. 

72 பேருக்கு இன்று கொரோன உறுதியாகியிருக்கும் நிலையில், இன்று ஒரே நாளில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 866 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்தியாவிலேயே இதுதான் அதிகம். 6430 பேர் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கூட 840 பேர் தான் குணமடைந்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 866 பேர் குணமடைந்துள்ளனர். 

எனவே தற்போதைய நிலவரப்படி, வெறும் 864 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்றுவரும்(864) நம்பரை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை(866) அதிகம். 23,503 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 
 
அதிகமானோரை குணமடைய வைப்பதுடன், இறப்பு விகிதமும் மிகக்குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 1.25% மட்டுமே. மகாராஷ்டிராவில் 283 பேரும், குஜராத்தில் 114 பேரும் மத்திய பிரதேசத்தில் 84 பேரும் டெல்லியில் 50 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 22 பேர் மட்டுமே இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்திருக்கின்றனர். 

குணமடைந்தோரின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பணிகள் மற்றும் தடுப்பு பணிகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற பெரிய நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள திணறும் நிலையில், இந்தியா கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவது, தமிழ்நாட்டில் மருத்து உட்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.