அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இன்று தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2019-20 ஆம் ஆண்டுவரை, அதிக அளவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற மாணவ-மாணவிகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி  படிக்கக் கூடிய சூழ்நிலையை அம்மாவின் அரசு உருவாக்கித் தந்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் 14 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 2013-14 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டு வரையில் 21 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

கடந்த 2012-13 ஆம் ஆண்டில் இருந்து நான்கு புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கல்வி நிலையங்கள் நகர மற்றும் கிராம மக்கள் எளிதில் சென்றடையும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. சென்ற 2011-12 ஆம் ஆண்டு முதல், இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1577 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் தேசிய தர நிர்ணய கட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உயர்கல்வி தரவரிசை பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள முதல் நூறு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 பல்கலைக்கழகங்களும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பொறியியல் கல்லூரிகளும், முதல் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 32 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன என்பதை பெருமிதத்துடன் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டண செலவை போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, இலவச பேருந்து அட்டை, மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிக்கும் மாணவர் வரை இலவச கல்வி போன்ற முன்னோடி திட்டங்களால் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 2020-21 ஆம் ஆண்டு உயர்கல்வித் துறை வளர்ச்சிக்காக 5 ஆயிரத்து 52 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இன்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

 

இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் அமைதியான சூழ்நிலை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளம் அதிகமாக உள்ளதால் இன்று பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அதிக அளவில் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட இரண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்புகளின் மூலம் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய்கள் மந்த நிலையிலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பட்டப்படிப்பு முடித்து பணியினை தேடவிருக்கும் உங்களுக்கு இது மிகுந்த நம்பிக்கையூட்டும் செய்தி என அவர் தெரிவித்துள்ளார்.