Tamil Nadu govt announced to NEET exam student per head Rs 1000
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கும் அவருடன் செல்லும் பாதுகாவலருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படக் கூடாது என கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் மத்திய அரசின் துரோகத்தால் நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. ஆனால் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் வெளி மாநிங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், பொது அமைப்புகள் தற்போது உதவி செய்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்திற்கு ‘நீட்’ தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப் படியாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய் பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் தலா ஒருவருக்கு 1,000 ரூபாய் வீதமும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதை அவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து முன்பணமாகவே பெற்றுக் கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகும் பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளைக் கொடுத்து மேற்படி தொகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்.‘நீட்’ போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
இதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்..
