திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு  உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு இன்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த  மருத்துவ குழுவினர் தளர்வுகள் செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகையால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன்  19 முதல் 30ம் தேதி 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என அறிவித்தார். இந்த ஊரங்கில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ, வாடகை கார்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால்  டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஜூன் 19 முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.