Tamil Nadu government has no chance to split - within 24 hours it will be joined

29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை பார்த்தார்கள் என்பற்காக அவர்கள் தினகரன் ஆதரவாளர்கள் என்றோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் என்றோ கூற முடியாது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்த அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்..

தற்போது தமிழக சட்டசபையில் சபாநாயகர் நீங்கலாக அ.தி.மு.க. எம்எல் 134 பேர் உள்ளனர். ஓபிஎஸ் அணியில் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். 29 எம்எல்ஏக்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகவும் , எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது வரை 93 எம்எல்ஏக்களும் ஆதரவாக உள்ளனர்.

3 அணிகளாக அ.தி.மு.க. செயல்படுவதால் வருகிற 14–ந்தேதி சட்டசபை கூடும்போது, எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் இன்று சென்னைக்கு வருமாறு ‘திடீர்’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் இன்று பிற்பகல் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஜெயலலிதா உருவாக்கிய அரசு கவிழ்வதை விரும்பாத, ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை பார்த்தார்கள் என்பதால், அவர்கள்.தினகரனின் ஆதரவாளர்கள் என்றோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் என்றோ கருதமுடியாது என தெரிவித்தார்.எனவே இந்த அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை என அவர் திட்டவட்டமாக கூறினார்.

ஓபிஎஸ் விதித்த 2 நிபந்தனைகளை எடப்பாடி அரசு நிறைவேற்றும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் 2 அணிகளும் இணையும் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.