இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்து 27 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. 825 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதால் கொரோனா இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை. 

இந்தியாவிலேயே  கொரோனா தடுப்பு பணியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 1821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 960 பேர் குணமடைந்துவிட்டனர். 835 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

அந்தளவிற்கு தமிழ்நாட்டில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுவதுடன், தடுப்பு நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை குணமடையவைப்பதில் முழு வீச்சில் பணியாற்றிவருகின்றனர். அதேபோல காவல்துறையினர், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் கொரோனா குறித்த தகவல்களையும் விழிப்புணர்வுகளையும் செய்திகளையும் மக்களுக்கு கொண்டுசேர்க்கும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களும் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.

கொரோனாவால் மனித குலமே அஞ்சி நடுங்கும் வேளையில், மேற்கூறிய துறைகளை சேர்ந்தவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர். அவர்களை காப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு அவர்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் இறங்கி பணியாற்றும் அனைத்து துறை சார்ந்த களப்பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, ஜிங்க் மாத்திரை மற்றும் அனைத்து விதமான விட்டமின் மாத்திரைகளும் நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

களப்பணியாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு, களப்பணியாளர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பையும் கருத்தில்கொண்டு அவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்துவருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், குறைந்த விலையில் மளிகை பொருட்கள், விவசாயிகளுக்கான அறிவிப்புகள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உறைவிடத்தை உறுதி செய்து அவர்களை பாதுகாத்தல் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான விஷயங்களை முடிந்தவரை செய்துகொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.