சென்னையில் ஒரே நாளில் 14,000 கொரோனா ஆய்வு செய்யும் அளவுக்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக ஆயிரத்தில் இருந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 67,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக 45, 814 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 1,676 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில்;- சென்னையில் ஒரே நாளில் 14,000 கொரோனா ஆய்வு செய்யும் அளவுக்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16,000, 20,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும் அதே அளவுக்கு உயர்த்த வேண்டும்; அதன் மூலம் கொரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும்!

சென்னையில் இன்று ஏழாவது நாளாக ஊரடங்கு முழுக்கட்டுப்பாட்டுடன் தொடர்வது பாராட்டத்தக்கது. இதே கட்டுப்பாடு நீடிக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதுடன், அறிகுறி உள்ளவர்கள் சோதனையும் செய்து கொள்ள வேண்டும். அதுதான் கொரோனா இல்லாத சென்னையை உருவாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.