தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்: 

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவில் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்ததோடு, மெசியா, நாகராஜ், சாம்சன், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களது   விசைப்படகைச் சுற்றிவளைத்துத் தாக்கி, சேதப்படுத்தி நடுக்கடலில் மூழ்கடித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த மீனவர்கள்  நான்கு பேரும் இறந்துபோன செய்தி கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது இனவெறிப்பிடித்த இலங்கைக்கடற்படை செய்த திட்டமிட்டப் பச்சைப்படுகொலையாகும். 

தமிழர்கள் தாக்கப்படும்போதெல்லாம் இந்திய நாடும், அதன் ஆட்சியாளர்களும் மௌனத்தையே மொழியாகக் கொண்டு எம்மினச்சாவை எளிதாகக் கடந்துசெல்வார்களென்றால், அது பெரும் வன்மத்தை நெஞ்சிலே உரமேற்றி இந்திய நாட்டின் மீதானப் பற்றே மொத்தமாகப் பட்டுப்போகுமளவுக்கு பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் மறக்க வேண்டாம். எம்மினச் சொந்தங்கள் பச்சைப்படுகொலை செய்யப்படும்போது இந்தியா அதனைத் தட்டிக்கேட்காது இலங்கையோடு கள்ள உறவு கொள்ளுமென்றால், அது தமிழர்களின் இன உணர்வையும், மான உணர்வையும் சீண்டிப்பார்ப்பதாகவே உள்ளது. 

கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் உடல் நலிவுக்கு ஆட்பட்டு முடமாக்கப்பட்டுள்ளனர். பல கோடிக்கணக்கான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இனப்படுகொலை செய்திட்டப் போர்க்குற்றவாளிகளான  மகிந்தா ராஜபக்சேவும், கோத்தபய ராஜபக்சேவும் அதிகாரத்துக்கு வந்தவுடன் மீண்டும் தமிழக மீனவர்கள் மீதானத் தாக்குதல்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன.  ஒரு பாரிய இனப்படுகொலையை நடத்தி முடித்து, இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்தப் பிறகும், கொடும் வன்மமும், இனவெறியும் துளியும் அடங்காது இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இப்படுகொலைகளுக்கெல்லாம் பழிதீர்க்கிற நாள் வெகுதொலைவில் இல்லை. 

ஆகவே, இனியும் இனப்படுகொலை நாடான  இலங்கையை  நட்பு நாடு எனக்கூறி  எட்டுக்கோடி தமிழர்களை அவமதிக்கும் போக்கை மேற்கொள்ளாது, தமிழக மீனவர்களின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி அலட்சியம் செய்யாது,  கச்சத்தீவை மீட்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையினரைக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். 

இனி எப்போதும் இத்தகைய இனவெறிப்படுகொலைகள் நிகழாதிருக்க இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிக்கை விடுப்பதுடன், அவர்களுடான அரசியல் மற்றும் பொருளாதார உறவை மொத்தமாகத் துண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மேலும், நான்கு மீனவர்களின் உடல்களை விரைந்து மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதுடன், அவர்களது குடும்பத்தினருக்குத் தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.